அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை

புதுடில்லி: அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக பணமோசடி விசாரணைக்காக ஆறு மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இளைஞர்களின் அரசு பணி மோகத்தை சாதகமாகப் பயன்படுத்தி, கோடிக் கணக்கில் பண மோசடி நடப்தாக புகார் எழுந்தது. அரசுப் பணிக்காக மோசடி கும்பலிடம் பணம் கொடுத்த ஏமார்ந்தோர் பலர் அடுத்தடுத்து புகார் தெரிவித்தனர். இதன் பின்னணியில் மிகப் பெரிய கும்பல் செயல்படுவதாக அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி பற்றி விசாரிக்க களம் இறங்கியுள்ளது.


அதன் படி, தமிழகம், கேரளா, பீகார், மேற்கு வங்கம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மோசடி கும்பல் கை வரிசை காட்டியது விசாரணையில் தெரய வந்துள்ளது. ரயில்வே, வருமான வரித்துறை, அஞ்சல் துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, ஐகோர்ட், தலைமை செயலகம் உள்ளிட்ட 40 அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்த கும்பல், இளைஞர்களிடம் பல கோடிகளை சுருட்டியுள்ளது.


இதையடுத்து, தமிழகத்தின் சென்னை, பீகாரின் முசாபர்பூர், மோத்திஹரி, கேரளத்தின் எர்ணாகுளம், பந்தலம், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, குஜராத்தின் ராஜ்கோட், உபியில் கோரக்பூர், பிரயாக்ராஜ், லக்னோ என நாடு முழுதும் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


பணம் கொடுத்தவர்களில் சிலருக்கு போலியாக தயாரிக்கப்பட்ட அரசுப் பணி ஆணையை மோசடி கும்பல் அனுப்பி வைத்துள்ளது. இதற்காக, போலியான அரசு முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்களின் இ-மெயில் ஐடிகளை ஒத்த, போலி இமெயில் ஐடி மூலம் இந்த ஆணைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


சோதனையிட்ட இடங்களில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,
இதன் பின்னணியில் மிகப் பெரிய கும்பல் செயல்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர். பண மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் பிடிக்கும் வரை சோதனை தொடரும் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement