எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம்; ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேச்சு

5


ஜெய்ப்பூர்: எதிர்காலப் போர்களுக்கு தயாராகி வருகிறோம் என ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்து உள்ளார்.


ராணுவ தினத்தை முன்னிட்டு, நிருபர்களிடம் உபேந்திர திவேதி கூறியதாவது: ராணுவ தளவாட உற்பத்தியை உள்நாட்டு மயமாக்கல் என்பது ஒரு இலக்கு மட்டுமல்ல, அது ஒரு தேவையாகும். இந்திய ராணுவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஒரு படையாக முன்னேறி வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் வீரம் வெளிப்பட்டது.


நாம் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல, எதிர்காலப் போர்களுக்கும் தயாராகி வருகிறோம்.

ராணுவ தினம் முன்னிட்டு, ராணுவ வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடமையின் போது தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

ரஷ்யா- உக்ரைன் போரிலிருந்து, ஒரு மோதலின் கால அளவை கணிக்க முடியாது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். அது பல ஆண்டுகள் நீடிக்கும். அல்லது சில நாட்களில் முடியும். போர்க்களங்களில் துல்லியமான இலக்குகளைத் தாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்கள் நமக்கு தேவை. இந்த சீர்திருத்தங்கள் அனைத்து ராணுவத் துறைகள் மற்றும் சேவைகளிலும் தொடரும்.


நமது எதிரிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் தெரிவிக்க விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், இந்திய ராணுவம் அனைத்து வகையான போர்களுக்கும், அனைத்து வகையான தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. எதிர்காலப் போர்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.


காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து ஒத்துழைப்போம். நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் ஆதரவு எங்கள் மன உறுதியை அதிகரிக்கும். நாட்டைப் பாதுகாக்கும் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் குடும்பங்களை அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உபேந்திர திவேதி கூறினார்.

Advertisement