வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி

2

புதுடில்லி: உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம் என்று 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பன்முகத்தன்மையே பலம்



டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்கள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இது 4வது முறையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இவ்வளவு பெரிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்குமா? என்ற பலத்த சந்தேகம் உலகளவில் இருந்தது. ஆனால், அனைத்தையும் தவிடுபொடியாக்கி, இந்தியா நிரூபித்தது. அதுமட்டுமில்லாமல், தனது பன்முகத்தன்மையையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றிக் காட்டியது.

உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம். உலகளாவிய தளங்களில் வளரும் நாடுகளின் நலன்களுக்காக இந்தியா வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஜி20 தலைமையின் போதும், வளரும் நாடுகளின் கவலைகளை நிகழ்ச்சியின் முக்கிய பிரச்னையாக இந்தியா மாற்றியது.

முக்கிய நோக்கம்



இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சி என்னவென்றால், நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் ஒட்டுமொத்த வளரும் நாடுகளுக்கும், காமன்வெல்த் நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டும் என்பதாகும். இந்தியாவைப் போன்ற தொழில்நுட்ப அமைப்புகளை நமது நட்பு நாடுகளும் உருவாக்கிக் கொள்ளும் வகையில், திறந்தவெளி தொழில்நுட்பத் தளங்களை நாம் உருவாக்கி வருகிறோம். ஜனநாயகம் பற்றிய அறிவையும், புரிதலையும் நாம் எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதில் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த பணி மக்களை நாட்டின் ஜனநாயக செயல்முறையுடன் ஆழமாக இணைக்கிறது.

வலுவான தூண்





பெண் பிரதிநிதித்துவம் தான் இந்திய ஜனநாயகத்தின் மற்றொரு வலுவான தூண். இன்று இந்தியப் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அதனை முன்னின்று வழிநடத்துகிறார்கள். நமது நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் பதவி வகிக்கிறார். இன்று இந்த மாநாடு நடக்கும் டில்லியின் முதல்வரும் ஒரு பெண் தான். இந்தியாவின் உள்ளாட்சி மற்றும் கிராமப்புற அமைப்புகளில் சுமார் 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர். அடிமட்ட அளவிலான தலைமைத்துவத்தில் இவர்கள் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இது உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சாதனையாகும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் மிகவும் வளமானது. நாடு முழுதும் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இந்தத் துடிப்பு மற்றும் தன்மை ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement