இந்த முறை தோட்டாக்கள் தப்பாது... அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு டிவி மிரட்டல்

12


டெஹ்ரான்: ஈரான் உள்நாட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அரசு டிவி கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், 3,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்றாற் போலவே, டிரம்பும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரானை எச்சரித்த அவர், அரசு நிறுவனங்களை கைப்பற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேவையான உதவிகள் உங்களை தேடி வரும் என்று போராட்டக்காரர்களுக்கு அதிபர் டிரம்ப் தைரியம் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரான் அரசு டிவி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த போட்டோவை வெளியிட்ட ஈரான் அரசு டிவி, 'இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது,' எனக் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆதாரத்தை பகிர்ந்த இஸ்ரேல் - அமெரிக்க பத்திரிக்கையாளர் எமிலி ஸ்ரேடர், "ஈரான் அரசு டிவி எல்லைக் கடந்து விட்டது. கொலைமுயற்சியின் போது குண்டு காயம் பட்ட டிரம்பின் போட்டோவை வெளியிட்டு, 'இந்த முறை தோட்டாக்கள் தவற விடாது,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரடி அச்சுறுத்தல்," எனக் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Advertisement