ஈரானில் இந்திய மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து அடவாடி; மத்திய அரசுக்கு ஓவைசி வலியுறுத்தல்

20

ஹைதராபாத்: ஈரானில் இணையவசதி இல்லாததால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் அவர் கூறியதாவது; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசியது நல்ல விஷயம். ஆனால், ஈரானில் சிக்கியுள்ள 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் அவசர வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஈரானில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக ஷாஹித் பெஹெஷ்டி பல்கலையில் மட்டும் 70 முதல் 80 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 5 முதல் 8 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஈரானில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேச முடியாமல் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

பல மாணவர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் விமான டிக்கெட் வாங்கும் அளவுக்குப் பண வசதி இல்லை. இங்குள்ள பெற்றோர்களாவது டிக்கெட்டையோ, பணத்தையோ அனுப்பலாம் என்றால், தற்போது ஈரானில் இணையசேவை கிடையாது.

பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களின் பாஸ்போர்ட்டுகளைத் திரும்ப வழங்க மறுப்பதாகவும், அவர்கள் ஈரானை விட்டு வெளியேற அனுமதிப்பதில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது. எனவே, ஈரானில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement