'ஆன்லைன்' சூதாட்டத்தில் மூழ்கிய மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்': :ஆசிரியர்களுடன் போலீசார் கை கோர்ப்பு

6

சென்னை: 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளில் மூழ்கியுள்ள, மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்க, 17,450 ஆசிரியர்களுடன், போலீசார் கை கோர்த்து உள்ளனர்.


இது குறித்து, போலீசார் கூறியதாவது:
தமிழகத்தில் 'ஆன்லைன்' விளையாட்டுகளை கண்காணிக்க, தனியாக ஆணையம் செயல்படுகிறது. இது, 'ஆன்லைன்' சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்யும் நபர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து வருகிறது. 'ஆன்லைன்' விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு, வயது மற்றும் நேரத்தை வரையறை செய்துள்ளது.


இந்நிலையில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் மூழ்கியுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடையாளம் காணும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 17,450 ஆசிரியர்களுடன்இணைந்து, 1.47 லட்சம் மாணவர்களிடம், 'ஆன்லைன்' விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட செயலிகள் குறித்து பேச்சு கொடுத்து, விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


'ஆன்லைன்' சூதாட்ட செயலிகளில், மாணவ, மாணவியர் மூழ்கி கிடப்பது தெரியவந்தால், அவர்களுக்கு பெற்றோர் உதவியுடன் 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement