ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

புதுடில்லி: பாஜவின் புதிய தேசிய தலைவர் தேர்வு விவரம், ஜன.20ம் தேதி அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜ தேசிய தலைவராக தற்போது நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த விட்ட போதிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் புதிய தேசிய தலைவர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜ வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜன.19ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜ அறிவித்து உள்ளது.

மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.19ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அடுத்த நாளான ஜன.20ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினமே புதிய தேசிய தலைவர் யார் என்பதும் அறிவிக்கப்பட்டு விடும். இந்த தேர்தலை நடத்த ராஜ்யசபா எம்.பி., கே. லஷ்மன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது செயல் தலைவராக உள்ள நிதின் நபின், பாஜ புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய தலைவர் நட்டாவும், தொடக்கத்தில் தேசிய செயல் தலைவராக இருந்து, பின்னர் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement