பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு


மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் 870 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 16 காளைகளை பிடித்து, அரசின் விதிகளின்படி விளையாடிய அஜித்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மதுரையின் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.


மாட்டுப் பொங்கல் தினமான இன்று, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது. துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், 7.30 மணிக்கு துவங்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, 9 மணியாகியும் உதயநிதி வராத நிலையில், கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.அதன்பிறகு, மைதானம் வந்த அமைச்சர் உதயநிதி கொடியசைத்து வைத்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

போட்டியில் மொத்தம் 870 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 461 மாடுபிடி வீரர்களை காளைகளை பிடித்தனர். இதில் பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித், பொதும்புவை சேர்ந்த பிரபாகன் ஆகியோர் தலா 16 காளைகளை பிடித்தனர்.

இதில், அஜித், அரசின் விதிமுறைப்படி விளையாடியதால் அவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்தி 11 காளைகளை பிடித்து 3வது இடத்தை பிடித்தார்.


மேலும் குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் காளைக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement