மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடே பவள விழா

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்னும் உயர்ந்த நோக்கத்தை மனதில் நிறுத்தி, டி.வி.ராமசுப்பையரால், 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட, 'தினமலர்' நாளிதழ், ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி, தற்போது பவள விழா ஆண்டில், வீறு நடை போடுவதை எண்ணி அகம் மகிழ்கிறேன்.

ஜனநாயக நிலையிலிருந்து வழுவாமல், உண்மை செய்திகளை, வெளிக் கொணர்வதிலும், வர்த்தகம், விளையாட்டு, மாவட்ட செய்திகள் முதல், உலக செய்திகள் வரை, அனைத்திலும் சீர்துாக்கும் கோல்போல் நடு நிலைமையிலிருந்து சிறிதும் வழுவாமல், மானுட முன்னேற்றத்தில் அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டு, மக்களின் நம்பிக்கையை பெற்றதின் வெளிப்பாடே, பவள விழாவாக மலர்ந்துள்ளது.

சிறுவர்கள் நன்னெறியுடன் வளர, சிறுகதைகள்; அவர்களின் திறன்களை வெளிப்படுத்த போட்டிக என வரையறுத்து, சிறுவர் மலர், பட்டம் மற்றும் நகர்ப்புற மக்கள் விரும்பும் வகையில் வாரமலர் என வகைப்படுத்தி, மக்களை ஈர்க்கும் பாங்கு சிறப்பானவை.

தெய்வீக கதைகள், அறிவுரைகள் மற்றும் அனைத்து மதத்தினருக்குமான சிந்தனைகள் ஆகியவற்றை வழங்கும், ஆன்மிக மலர் தனித்துவமானது. நவீனத்தன்மையின் வெளிப்பாடாக இணையதளத்திலும், 'தினமலர்' இதழ் உலா வருதல், இளைய தலைமுறையினரின் ஏற்றத்திற்கு வழி வகுக்கிறது.

இந்தியாவின் எதிர்கால துாண்களாக திகழும், இளைஞர்களின் உள்ளத்தில், தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வினா - விடைகளை வெளியிட்டும், பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பாக, அவர்களை தயார்படுத்துவதிலும், 'தினமலர்' பங்கு தனித்துவமானது.

'தினமலர்' நாளிதழுக்கும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்திற்குமான தொடர்பு செவ்வியது. அருள்திரு பங்காரு அம்மா அவர்கள், ஆண்டுதோறும் வெளிவரும் தினமலரின் வருட மலர், பொங்கல் மலர் ஆகியவற்றுக்கு, அருளாசி வழங்கி சிறப்பித்துள்ளார்.

கால மாற்றத்திற்கு ஏற்றவகையில், தன்னை தகவமைத்துக் கொண்டு, பலவித புதுமைகளைப் புகுத்திக் கொண்டிருக்கும், தினமலருக்கும், எனக்குமான பிணைப்பு 35 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

மனித வாழ்வின் அடையாளம், அவனின் பண்பாடு. அந்த வகையில், மக்கள் மனதில் அறச்சிந்தனை வளர, தர்மமும், நீதியும் தழைத்தோங்க, அடித்தளமாகத் திகழும், ஆன்மிக செய்திகளை, அனைத்து மக்களிடமும் சேர்த்துக் கொண்டு, பவள விழா காணும் 'தினமலர்' நிறுவனத்திற்கும், அதன் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும், எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பவள விழா காணும் 'தினமலர்' இதழ், மென்மேலும் மேன்மை பெற, மேல்மருவத்துார் ஆன்மிக குருநாதர், அருள்மிகு பங்காரு சித்தர் அவர்களின் ஆசியும் வேண்டுகிறேன்.



டாக்டர். கோ.ப.செந்தில்குமார்

துணைத் தலைவர்,

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம், மேல்மருவத்துார்



Advertisement