சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஆத்துார்: ஆத்துார் வட்டார போக்குவரத்து துறை, ரோட்டரி கிளப், தன்னார்வ அமைப்பு உள்ளிட்டவை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், பேரணியை, ஆர்.டி.ஓ., தமிழ்மணி தொடங்கி வைத்தார். உடையார்பாளையம் வழியே பழைய பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி சென்றது.


அதில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்; ஹெல்மெட் அணிய வேண்டும்; மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது; பள்ளி, மருத்துவமனை முன் கவனமாக செல்ல வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் புஷ்பா, ஆத்துார் டவுன் போலீசார், மாணவியர், தன்னார்வ அமைப்பினர் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் தொளசம்பட்டி போலீசார் சார்பில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரணியை, எஸ்.ஐ., அமிர்தலிங்கம் தொடங்கிவைத்தார். மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, துண்டு பிரசுரம் வழங்கியபடி, கடைவீதி வழியே சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனர். அங்கு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement