அங்கீகாரம் பெறாத, உரிமம் புதுப்பிக்காத பள்ளிகள் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பாதிக்குமா?

பெங்களூரு: அங்கீகாரம் பெறாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத பள்ளிகளின், 10ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளின் பெயரில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு பதிவு செய்ய, கர்நாடக தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது.

கல்வித்துறையின் சுற்றறிக்கைப்படி, 2025 - 26ம் ஆண்டில் பள்ளி நிர்வாகங்கள் புதிதாக அனுமதி பெற, உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பம் தாக்கல் செய்ய, ஜனவரி 12 வரை அவகாசமும்; அனுமதி கோரிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட கல்வித்துறை துணை இயக்குநர்களுக்கு பிப்ரவரி, 16 வரை அவசாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு புதிதாக அனுமதி அளிக்கும் மற்றும் உரிமத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை கல்வித்துறை தாமதமாக துவக்கியதால், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு தயாராகும் கர்நாடக தேர்வு ஆணையத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

மார்ச், 18 முதல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடத்த தேர்வு ஆணையம் ஏற்கனவே அட்டவணை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளும்படி, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தனியார் பள்ளி சங்கங்கள், ஆட்சேபனை தெரிவித்துள்ளன. கல்வியாண்டு துவக்கத்திலேயே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதை கல்வித்துறை துவக்கியது.

ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பணி, தேர்வு நெருங்கும் நிலையிலும் முடியவில்லை. இது ஊழலுக்கு வாய்ப்பளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

பள்ளி நிர்வாகங்கள் நிர்ணயித்த நேரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தங்களுக்கு நெருக்கமான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், ஆவணங்கள் தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டித்து கொள்கின்றன. இதனால், பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதும், உரிமத்தை புதுப்பிப்பதும் தாமதமாகிறது என, தங்கள் இயலாமையை தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உரிமத்தை புதுப்பிக்க, இதுவரை 5,762 பள்ளிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன. இதில், 761 பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டது. 3,697 பள்ளிகள் அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை பின்பற்றாததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1,304 பள்ளிகளின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.

இத்தகைய பள்ளிகள், உரிமம் பெறாத பள்ளிகளின், 10ம் வகுப்பு மாணவர்களை, வேறு பள்ளிகளின் பெயரில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு பதிவு செய்து கொள்ள, தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement