சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
மதுரையைச் சேர்ந்த சுபாஷினி சவுடாம்பிகை, இல்லத்தரசி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு பிஸ்கெட்ஸ் தயாரிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, மில்லட்ஸ் இன் மினிட்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, இன்று தமிழகத்தின் முன்னணி சிறுதானிய ஸ்நாக்ஸ் நிறுவனமாக உயர்த்தி இருக்கிறார். ஐ.ஐ.டி., சென்னை ‛இன்குபேஷன் செல்' இவரது உணவுப் பொருட்களுக்கு சான்றளித்து தொழில்நுட்ப ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது இவரது திறமைக்கு உதாரணம். சிறுதானிய முறையில் மோமோஸ், அத்தோ நூடுல்ஸ், வாபிள்ஸ், ராகி சாக்லேட் தயார் செய்வது குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக விளக்குகிறார்.
சிறுதானிய மோமோஸ்
திபெத், நேபாளம் பகுதியில் தோன்றிய பாரம்பரிய உணவுமுறைகளில் ஒன்று மோமோஸ். இன்று இளைஞர்களின் விருப்ப உணவாக மாறிவிட்டது.
தேவையான பொருட்கள்
சிறுதானிய மாவு - 400கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் - 400 கிராம்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
துருவிய சீஸ் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறுதானிய மாவை கோதுமை மாவுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். நறுக்கி வைத்திருந்த பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1 ஸ்பூன் அளவு இஞ்சி, கொத்தமல்லி, உப்புடன் சேர்த்து கலந்து தனியே வைக்க வேண்டும். பின் துருவிய சீஸ் அதில் சேர்த்தால் மோமோஸ் உள்பகுதியில் சேர்ப்பதற்கான 'ஸ்டப்பிங்' ரெடியாகி விடும். பின் ஏற்கனவே 30 நிமிடம் ஊற வைத்த மாவை சம அளவிலான உருண்டைகளாகப் பிரிக்கவும். மோமோஸின் எல்லா பக்கங்களிலிருந்தும் மடிப்புகளை உருவாக்கவும். நடுவில் காய்கறி 'ஸ்டப்பிங்' வைத்து மாவை மையத்தில் மூடி, அதிகப்படியான மாவை கிள்ளவும். அனைத்து மோமோக்களையும் ஒரு ஸ்டீமரில் வைத்து, மோமோஸை 15 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும். மைதா சேர்க்காத சுவையான சிறுதானிய மொமோஸ் ரெடி..!
அத்தோ நூடுல்ஸ்
மியான்மர் நாட்டின் பிரபலமான அத்தோ நுாடுல்ஸ் பர்மா தமிழர்களால் சென்னையின் இரவு நேர தெருவோரக் கடை உணவாக கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
சிறுதானிய நூடுல்ஸ் - 180 கிராம் பாக்கெட்
வேர்க்கடலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய பூண்டு - 1
பெரிய நெல்லிக்காய் அளவில் புளி -1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை -1
முட்டை -2
செய்முறை:
முதலில் சிறுதானிய நூடுல்ஸ்சை கொதிக்கும் நீரில் வேகவைத்து வடித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு கடாயில் வேர்க்கடலையும், பொட்டுக்கடலையும் நன்றாக வறுத்து அதை பொடித்து வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். பின் பூண்டையும் பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். ஒரு தட்டில் வேகவைத்த நூடுல்ஸ் அதற்கு மேல் பொடி செய்து வைத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும். அதற்கு மேல் பொன்னிறமாக வறுத்த பெரிய வெங்காயம், பூண்டை சேர்த்து தேவையான அளவு கொத்தமல்லியை தூவ வேண்டும். 1 ஸ்பூன் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை சிறிது உப்புடன் எலுமிச்சை சாறு சேர்த்து பிசைய வேண்டும். சுவையான பர்மா அத்தோ நூடுல்ஸ் தயாராகி விடும். அவித்த முட்டையின் நடுவில் இதன் கலவையை சேர்த்தால் சுவையான மசால் முட்டையும் ரெடி..!
வாபிள்ஸ்
தேவையான பொருட்கள்
சிறுதானிய மாவு - 1 கப்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
கொதிக்க வைத்து ஆற வைத்த பால் - அரை கப்
உருகிய வெண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறுதானிய மாவை சோளமாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணிலா எசென்ஸ்,தேன், பால், வெண்ணை, உப்பு சேர்த்து இலகுவாக வருமாறு பிசைய வேண்டும். இந்த திரவக் கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வாபிள் மேக்கரை சூடாக்கி, கொஞ்சம் வெண்ணெய் தடவி சூடான பின் இந்த மாவை ஊற்றி பொன்னிறமாக வரும் வரை வாட்டினால் 5 நிமிடத்தில் மொறுமொறு வாபிள்ஸ் தயார்.
வாபிள் மேக்கர் இல்லாவிட்டால் தோசைக் கல்லிலும் தயார் செய்யலாம்.
ராகி சாக்லேட்
தேவையான பொருட்கள்
கோகோ பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ராகி மாவு - 1/4 கப்
செய்முறை:
ராகி சாக்லேட் செய்வதற்கு முதலில் கடாயில் ராகி மாவை குறைந்த சூடளவில் அடியில் கருகி விடாத வகையில் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். பின் கடாயில் தண்ணீர் ஊற்றி டபுள் பாயிலிங் முறையில் வெண்ணையை நன்கு உருக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணை 3 ஸ்பூன் ஊற்றி அதன் மேல் கோகோ பவுடரை சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின் தேன் கலந்து வறுத்து வைத்திருந்த ராகி மாவை கலக்க வேண்டும். சாக்லேட் செய்வதற்கான அச்சு இருந்தால் அதில் ஊற்றி பிரிட்ஜில்வைத்து விட வேண்டும்.பின் அரைமணி நேரம் கழித்து எடுத்தால் குழந்தைகள் விரும்பும் வகையில் சுவையாகவும் ஊட்டச்சத்து மிகுந்த ராகி சாக்லேட் தயார்.
- ரெங்கா
இவரை பாராட்ட 99949 49473
மேலும்
-
வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்