இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு

15


பாரிஸ்: கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது, 2026ம் ஆண்டு பிப்.1 முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு 10 சதவீதம் புதிய இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரானும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இது குறித்து பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் உள்ள நாடுகளின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது. இதுவே எங்கள் முடிவுகளுக்கு வழிகாட்டுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் சாசனத்திற்கும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு அடிப்படையாக அமைகிறது. இந்த அடிப்படையில்தான் நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், தொடர்ந்து ஆதரிப்போம்.


இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சியில் பங்கேற்கவும் நாங்கள் முடிவு செய்தோம். இந்த முடிவை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் ஆர்க்டிக் பகுதியிலும் நமது ஐரோப்பாவின் வெளி எல்லைகளிலும் உள்ள பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.


உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகில் வேறு எங்குமே இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது, ​​எந்தவொரு மிரட்டலோ அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது. வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. அவை உறுதிப்படுத்தப்பட்டால், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள். ஐரோப்பிய இறையாண்மை நிலைநிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.


அதேபோல், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அதிபர் டிரம்பின் நோக்கத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டியது முற்றிலும் தவறு. நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பைப் பின்தொடர்வதற்காக நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement