இந்திய கூடைப்பந்து அணியில் விளையாடுவதே அபிஷேக் லட்சியம்

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில், சிறப்பாக விளையாடும் கர்நாடக வீரர் அபிஷேக், இந்திய அணியில் விளையாடுவதை தனது இலக்காக நிர்ணயித்து உள்ளார்.

கலபுரகி நகரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் - சித்தம்மா தம்பதியின் மகன் அபிஷேக், 15. தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் இவர், உள்ளூர் மற்றும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம், புதிய நட்சத்திரமாக உருவெடுக்க ஆரம்பித்து உள்ளார். தேசிய அளவில் நடந்த போட்டிகளில், கர்நாடக அணிக்காக இரண்டு முறை விளையாடி உள்ளார்.

இதுகுறித்து அபிஷேக் கூறியதாவது:

நான் இப்போது, 10ம் வகுப்பு படிக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை கூடைப்பந்து விளையாட்டு என்றால், என்னவென்றே தெரியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடுகிறேன். என் அப்பா மளிகை கடை நடத்துகிறார். அம்மா அங்கன்வாடியில் உதவியாளராக வேலை செய்கிறார். நடுத்தர குடும்பம் தான். கூடைப்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்ட போது, பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்.

என் திறமையை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷ் குமாரும், பயிற்சியாளர் சங்கரும் ஆதரித்தனர். கலபுரகி மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், என்னை போன்ற வீரர்கள் விளையாட்டில் ஜொலிக்க தேவையான மைதான வசதிகள் இல்லை. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு பயிற்சி எடுப்பது கடினமாக உள்ளது.

இந்திய அணிக்காகவும், பிபா உலக கோப்பை போட்டியிலும் விளையாட வேண்டும் என்று ஆசை உள்ளது. இதை இலக்காகவும் நிர்ணயித்து உள்ளேன். தற்போது கலபுரகி நகரில் உள்ள சந்திரசேகர் பாட்டீல் மைதானத்தில், தற்காலிக கூடைப்பந்து மைதானம் கட்டப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement