கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்கும் கர்நாடக வீரர் ஸ்மரன் ரவிச்சந்திரன்

பெங்களூரை சேர்ந்த, 22 வயதேயான ஸ்மரன் ரவிச்சந்திரன், கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்து வருகிறார்.

பெங்களூரை சேர்ந்தவர் ஸ்மரன் ரவிச்சந்திரன். சிறு வயதில் மிகவும் துறுதுறுவென இருந்ததால், கோடை விடுமுறையை பயனுள்ளதாக ஆக்க, அவரது தாயார் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். முதலில் வீட்டில் அனுப்பி விட்டனரே என்பதற்காக பயிற்சி எடுத்தார். பின், அவருக்கு படிப்படியாக ஆர்வம் ஏற்பட, முழுமனதுடன் விளையாட துவங்கினார். 14, 16, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில், கர்நாடக அணி சார்பில் பட்டையை கிளப்பினார்.

பேட்டிங் கடந்த, 2024ல் விஜய் ஹசாரோ கிரிக்கெட் போட்டியில் விளையாட துவங்கினார். இவர் விளையாடிய, 13 போட்டிகளில், மூன்று முறை, 200 ரன்களும், ஒரு முறை, 100 ரன்கள் உட்பட 1,200 ரன்கள் எடுத்தார். அணியின் வெற்றிக்கு இவரின், 'பேட்டிங்' திறமையும் கைகொடுத்தது. நடப்பாண்டு 2025 டிசம்பர், 24ல் துவங்கி நடந்து வரும் விஜய் ஹசாரே போட்டியிலும், முதல் நான்கு போட்டிகளில், 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இது குறித்து ஸ்மரன் ரவிச்சந்திரன் கூறியதாவது:

வீட்டில் என் தொல்லை தாங்க முடியாமல், எனது தாயார் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். அதில், எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், முதன் முறையாக கர்நாடக அணி சார்பில் பங்கேற்றேன். அப்போது தான், இதை தொழிலாக தொடர வேண்டும் என்று விரும்பினேன்.

'டெஸ்ட்' போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை, எனது பயிற்சியாளர் சையது சைபுல்லா விளக்கினார். அதாவது, '0டெஸ்ட் போட்டி என்றால், 50 ஓவர்களுக்கு நிதானமாக விளையாட வேண்டும். அடுத்த, 30 ஓவர்களுக்கு ஒரு நாள் போட்டி போன்றும்; கடைசி 10 ஓவர், 'டி20' போட்டி போன்றும் விளையாட வேண்டும்' என்றும் விவரித்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டு அனைத்தும், எனது பயிற்சியாளருக்கே சேரும்.

அவகாசம் தேவை உள்நாட்டு போட்டி அட்டவணையை பார்த்தால், நாங்கள் ரஞ்சி கோப்பை போட்டியுடன் துவங்குவோம். பின், முஷ்டாக் அலி போட்டிக்கு செல்வோம். அதன்பின், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் பங்கேற்போம். இது முடிந்த ஒரு வாரத்துக்குள், மீண்டும் ரஞ்சி கோப்பை விளையாடுவோம். இம்மூன்று கோப்பை போட்டிகளுக்கும் இடையே போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.

உள்ளூர் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்த எனக்கு, 'ஐ.பி.எல்., டி20'யில் வாய்ப்பு கிடைத்தது மறக்க முடியாதது. பெங்களூரில் ஒரு நாள் 'லீக்' போட்டியில் விளையாடி கொண்டிருந்தேன். வழக்கமாக போட்டியின் போது நாங்கள் யாரும் மொபைல் போனை பயன்படுத்த மாட்டோம்.

அன்றைய தினம், எனது மொபைல் போனை, மைதானத்தின் பெவிலியனில் இருந்த நண்பரிடம் கொடுத்தேன். ஆனால், 'இயர் பட்' கொடுக்க மறந்து விட்டேன். பெவிலியன் அருகில் நான், 'பீல்டிங்'கில் இருந்த போது, போன் அழைப்பு வந்தது.

திடீரென போன் வந்த பின்னரே, என் காதில், 'இயர்பட்' இருப்பது தெரியவந்தது. அதில் பேசிய என் நண்பரின் தோழி, 'சன்ரைசஸ் ஹைதராபாத்' அணியினர் என்னை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும்; அந்த அணியில் ஆடம் ஜாம்பாவுக்கு பதில் என்னை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை கேட்டு உற்சாகம் அடைந்தேன்.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -:.

Advertisement