திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

சித்ரதுர்கா: தனக்கு திருமணம் செய்து வைக்காமல் காலம் கடத்திய தந்தையை, இரும்புத்தடியால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா தாலுகாவின் அத்திகட்டா கிராமத்தில் வசித்தவர் சன்ன நிங்கப்பா, 60. இவரது மகன் லிங்கராஜ், 35. தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி, குடும்பத்தினரிடம் லிங்கராஜ் பிடிவாதம் பிடித்தார். ஆனாலும், தந்தை ஆர்வம் காட்டவில்லை.

இதனால், தந்தை, மகன் இடையே அவ்வப்போது சண்டை நடக்கும். நேற்று காலையும் இவ்விஷயமாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த லிங்கராஜ், இரும்புத்தடியை எடுத்து தந்தையின் மண்டையில் ஓங்கி அடித்தார். பலத்த காயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் செய்து வைக்கவில்லை என்ற காரணத்தால் தந்தையை மகன் அடித்து கொலை செய்வார் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மகனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

அங்கு வந்த ஹொசதுர்கா போலீசார், லிங்கராஜை கைது செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண குடும்ப தகராறு, பெருங்குற்றமாக மாறுவது அதிர்ச்சி அளிக்கிறது. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்களில், குடும்பத்தினர் ஒற்றுமையுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். குடும்பத்தில் என்ன பிரச்னை என்றாலும், அமர்ந்து பேசினால் அனைத்தும் சரியாகும்.

ஹொசதுர்காவில் நடந்த சம்பவம், சமுதாயத்துக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். தந்தையை கொன்ற மகனை கைது செய்துள்ளோம். தனக்கு திருமணம் செய்யவில்லை என்பதால், தந்தையை கொன்றாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என, விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement