சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்

கேப் கெனவரல்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியில் இருந்து சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் அங்கு சென்று ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் நம் நாட்டைச் சேர்ந்த விமானப் படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளி நிலையம் சென்று திரும்பினார்.

இதே போல், 'க்ரூ - 11' என்ற பயண திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன், மைக் பின்கே ஆகிய இரு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி, ரஷ்யாவின் ஒலெக் பிளாட்டோனோவ் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'டிராகன்' விண்கலத்தில் சென்றனர். இவர்களது ஆய்வு பணிகள் பிப்ரவரி வரை திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதில் ஒரு வீரருக்கு தீவிரமான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவ பராமரிப்பில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா முடிவு செய்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக, இது போல் அவசரமாக திரும்ப அழைத்தல் நடந்துள்ளது. இதற்காக 14ம் தேதி டிராகன் விண்கலம் விண்வெளி நிலையம் சென்றது.

அதன் மூலம் நேற்று நான்கு விண்வெளி வீரர்களும் சான் டியாகோ அருகே பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கினர். அவர்கள் கடற்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வீரர் யார் என்பதை தனியுரிமை கருதி நாசா வெளியிடவில்லை.

Advertisement