வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்

கோவை: வேளாண் பல்கலை மத்திய பண்ணை வளாகத்தில், 'பட்டி பெருகணும், பால் சோறு பொங்கணும்' என்ற கருப்பொருளில் பட்டி பொங்கல் விழா நடந்தது.

பண்ணை கால்நடைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பட்டி மிதித்தலின் போது, பண்ணை பசுக்கள் நவதானிய குளத்தில் கால்களை வைத்து சென்றன. இதனால் விவசாயம் செழித்து, ஆரோக்கியம் பெருகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.

துணைவேந்தர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையேற்று பேசுகையில், ''வேளாண்மை வளர்ச்சிக்கு மனித வளமே மிக முக்கிய சக்தி. பண்ணைத் தொழிலாளர்களின் உழைப்பு பல்கலை வளர்ச்சியின் அடித்தளம். பட்டி மிதித்தல் போன்ற பாரம்பரிய நடைமுறைகள், இன்றளவும் வழக்கத்தில் உள்ளன. வேளாண் பல்கலையின் முதன்மை இலக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் காப்பதே,'' என்றார்.

பயிர் மேலாண்மை துறை இயக்குனர் கலாராணி, உழவியல் துறை தலைவர் கிருஷ்ணன், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement