திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்

36

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியிலுள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கூடு விழா பிறை சிகப்பு கொடி, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டது. இதை எதிர்த்து தர்கா நிர்வாக தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச., 1ல் உத்தரவிட்டார். தீபம் ஏற்றப்படவில்லை.

இது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. டிச., 2 முதல் மலை மேல் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

டிச., 21ல் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக டிச., 19 முதல் அனைத்து மக்களும் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

டிச., 21 இரவு போலீஸ் பாதுகாப்புடன் தர்கா நிர்வாகத்தினர் மலை உச்சியில் கோவில் இடத்தில் தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றினர். ஜன., 6 சந்தனக்கூடு விழா நடந்தது.

சந்தனக்கூடு பிறை கொடியை அகற்றக்கோரி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், பா.ஜ., நிர்வாகிகள் கோவில் நிர்வாகத்திடமும், போலீசிலும் மனு அளித்தனர்.

தீப விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு ஜன., 9ல் நடந்தபோது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

கோவில் நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை, போலீசாரால் சந்தனக்கூடு பிறை கொடி அகற்றப்பட்டது.

நேற்று காலை தர்கா நிர்வாகிகள், போலீஸ் உதவி கமிஷனர் சசி பிரியாவிடம், 'சந்தனக்கூடு கொடி அகற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் கட்டி இருந்தோம்.

நடவடிக்கை தேவை' என, புகார் மனு அளித்தனர். தொடர்ந்து, மலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement