குப்பை கொட்டும் போராட்டம் பேச்சுவார்த்தையில் தீர்வு  

பண்ருட்டி: பண்ருட்டியில் குப்பை கொட்டும் போராட்டம் குறித்து தாசில்தார் பிரகாஷ் தலைமையில் பா.ஜ.க.வினருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

பண்ருட்டி நகராட்சியில் குப்பை கழிவுகள் கொட்டி மாசு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை கண்டித்து பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் இன்று 9 ம்தேதி குப்பைகள் அள்ளி நகராட்சிஅலுவலகத்தில் கொட்டப்படும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதுகுறித்து தாசில்தார் பிரகாஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கமிஷ்னர் காஞ்சனா, உதவிபொறியாளர் கார்த்திகேயன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். பா.ஜ., தரப்பில் மாவட்ட துணை தலைவர்கள் வினோத்குமார், செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட செயலாளர் மோகன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ராமலிங்கம், நக்கீரன், ஆன்மிக தலைவர் சக்திவேல், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சுந்தராமன், முன்னாள் வர்த்தக பிரிவு தலைவர் அசோக்ராஜ், வெற்றிவேல், மண்டல தலைவர்கள் அஞ்சுகம், கிருபாகரன், கோபிநாத், அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பா.ஜ., சார்பில் கெடிலம் நதிக்கரையில் குப்பைகள் கொட்டாமல் இருக்க வேண்டும்.கெடிலம் நதியில் கழிவுநீர் கலப்பை நிறுத்திட வேண்டும். குப்பைகள் நகரில் கொட்டாமல் மறுசுழற்சி செய்திட வேண்டும். பிரேதங்கள் நதிக்கரையில் புதைக்க கூடாது, என வலியுறுத்தினர்.

இதற்கு நகராட்சி சார்பில் கமிஷ்னர், 'கெடிலம் நதி, சுடுகாடு பகுதியில் உள்ள குப்பைகள் 30 நாட்களில் அகற்றப்படும். குப்பைகள் கொட்டாமலிருக்கவும், தவறும் பட்சத்தில் கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டும் நபர்கள் மீது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.13.56 கோடி நிதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இந்த பணி, 8 மாதத்தில் முடிந்துவிடும். பின் கழிவுநீர் ஆற்றில் கலக்காது. மேலும் மணிநகர், நேதாஜி நகர், தேவராஜ் நகர் உரக்கிடங்கு மூலம் குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படும். பிளாஸ்டிக் கழிவுகள் சாம்பலாக்கப்பட்டு உரமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உறுதியளித்தனர்.

Advertisement