அமித் ஷா வீட்டு முன் போராட்டம்; திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் குண்டுக்கட்டாக கைது

10


புதுடில்லி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பணிகளை செய்து வரும் ஐபேக் நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ( ஜன.,08) சோதனை நடத்தினர். ஐபேக் நிறுவனத்தின் இயக்குநரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் தலைவருமான பிரதிக் ஜெயின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

அங்கு சென்ற திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதிக் ஜெயின் வீட்டில் இருந்த மொபைல்போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்.

அப்போது, தன் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்வதாக அமலாக்கத்துறை மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆதாரங்களைப் பறித்து இடையூறு செய்வதாக அமலாக்கத்துறையும் பதிலுக்கு குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து அக்கட்சியின் எம்பிக்கள் மஹூவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன், கீர்த்தி ஆசாத், சதாப்தி ராய் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

அப்போது, எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையில், "நாங்கள் பாஜவை தோற்கடிப்போம். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியை டில்லி போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது," என்றார்.

Advertisement