அமெரிக்காவின் நலனுக்காக போராடுகின்றனர்: ஈரான் மதகுரு கமேனி காட்டம்

5


டெஹ்ரான்: '' மற்றொரு நாட்டின் அதிபரை(டிரம்ப்) மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக சொந்த நாட்டின் தெருக்களை போராட்டக்காரர்கள் நாசப்படுத்துகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தூக்கி எறியப்படுவார்'' என ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கூறியுள்ளார்.


ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது.


ஆட்சியாளரான மத குரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், நாற்பத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், மக்கள் வலுவாக போராடினால், ஈரான் ஆட்சியாளர்கள் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். கமேனி எங்காவது செல்ல விரும்புகிறார். ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிலையில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு அயதுல்லா கமேனி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றினார்.


அப்போது அவர் கூறியதாவது: டிரம்ப் திமிர்பிடித்தவர். அவரது கைகள் ஈரானியர்களின் ரத்தத்தால் கறை படிந்தவை. அமெரிக்க அதிபர் தூக்கி எறியப்படுபவார். அவரது சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறொரு நாட்டின் ஜனாதிபதியை மகிழ்விக்க தங்கள் சொந்த நாட்டை போராட்டக்காரர்கள் நாசமாக்குகிறார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் அவர், போராட்டக்காரர்களை குண்டர்கள் என்றும் நாசக்காரர்கள் என்றும் விமர்சித்ததுடன், அவர்களுக்கு முன் நான் பின்வாங்க மாட்டேன். 1979 ல் நடந்த புரட்சியின் போது ஈரானை ஆட்சி செய்தவர்கள் தூக்கி எறியப்பட்டதுபோல், டிரம்ப்பும் தூக்கி எறியப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement