புதிய உச்சம் தொட்ட எஸ்.ஐ.பி., முதலீடு: தங்க இ.டி.எப்., முதலீடும் அதிக வளர்ச்சி
கடந்த டிசம்பர் மாதத்தில், மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் சற்று குறைந்திருந்தாலும், சிறு முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வான எஸ்.ஐ.பி., வாயிலான முதலீடு, புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக, மியூச்சுவல் பண்டுகளின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பரில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு, 6 சதவீதம் குறைந்து, 28,054 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதேநேரம், மாதந்தோறும் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி., முறையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 31,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தங்க இ.டி.எப்.,களில் செய்யப்பட்ட முதலீடும் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்தாண்டில் தங்கம் 70 சதவீதம் லாபம் கொடுத்ததே இதற்கு முக்கிய காரணம். நிறுவனங்கள் வரி செலுத்துதல் மற்றும் பணத் தேவைக்காக நிதியை திரும்ப பெற்றது ஆகியவற்றால், கடன் சார்ந்த நிதிகளில் இருந்து 1.32 லட்சம் கோடி ரூபாய் வெளியேறிஉள்ளது.
இதன் காரணமாக, மியூச்சுவல் பண்டுகளின் மொத்த சொத்து மதிப்பு 80.80 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 80.23 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு, பணப்புழக்க மேலாண்மைக்காக கடன் சார்ந்த பண்டுகளில் இருந்து முதலீடுகள் வெளியேறியதும், சந்தை மதிப்பீடுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டதுமே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.