வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; அமெரிக்க அமைச்சருக்கு இந்தியா பதிலடி

3

புதுடில்லி: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இழுபறியாகி வரும் விவகாரத்தில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறியாகவே உள்ளது. அமெரிக்க வேளாண் பொருட்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவில் விற்க வேண்டும் என்பது டிரம்பின் வற்புறுத்தல். ஆனால் மத்திய அரசு இதன் மீது எவ்வித முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க, அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தயாராகி விட்டது. ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து டிரம்பிடம் பேச மறுத்துவிட்டார். அதனால் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டன என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் கூறி இருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரியளவில் பேசப்பட்ட நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளதாவது;

அவரின்(ஹோவர்டு லுட்னிக்) கூற்றுகளை நாங்கள் பார்த்தோம். கடந்தாண்டு பிப். 13ம் தேதியே இரு நாடுகளும் (அமெரிக்கா, இந்தியா) வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சு வார்த்தையை நடத்திக் கொள்ளலாம் என்று இறுதி செய்திருந்தன. அன்று முதலே, பரஸ்பரம் நன்மை தரும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கும் வகையில் பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் தொலைவுக்கு மிக அருகில் இருந்தோம். ஆனால் அவரின் (ஹோவர்டு லுட்னிக்) கூற்றுகளில் பேச்சுவார்த்தைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ள விதம் துல்லியமானது அல்ல.

இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நன்மை தரும் வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் தொடர்ந்து ஆர்வமுடனேயே இருக்கிறோம். அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

தற்செயலாக, பிரதமர் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோரும் 2025 ஆம் ஆண்டில் 8 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர், அப்போது பரந்துப்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Advertisement