ஜனநாயகனுக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

10


கோவை: “ஜன நாயகன் படத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.


திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'ஜன நாயகன்' திரைப்படத்துக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்சார் போர்டு சட்டப்பூர்வ கடமையை செய்து வருகிறது. படத்தை முழுமையாக பார்த்த சென்சார் போர்டு எந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும்.


கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இதுவரை எண்ணிக்கை அளவில் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.


த.வெ.க.,பா.ஜ.,வுக்கு வந்தால் அது அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும் என்ற கருத்தை தமிழிசை சவுந்தரராஜன் கூறியது அவருடைய கருத்து. பா.ஜ., யாரையும் அடிபணிய வைக்கவில்லை. கூட்டணி என்பது பரஸ்பரம் புரிதலின் அடிப்படையிலேயே அமையும். தே.மு.தி.க., எங்களது கூட்டணியில் இணைய வேண்டும் என்பதே பா.ஜ.,வின் விருப்பம் என்றாலும், இறுதி முடிவு அவர்களிடமே உள்ளது.


இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லா மொழி திரைப்படங்களையும் ஆர்வமாக பார்க்கின்றனர். காங்.,கட்சி, விஜய் பக்கம் நகர்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. தி.மு.க., அறிவித்த, 532 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அ.தி.மு.க.,வில் யாரை சேர்க்க வேண்டும் என்பது குறித்து இபிஎஸ் தான் முடிவு செய்வார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement