ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

12

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், கடந்த 9ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததை அடுத்து, படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இதனால், திரைப்படத்தை தயாரித்த கே.வி.என்., நிறுவனம், உடனே, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவை, கடந்த 9ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, 'ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தது.

அன்றைய தினமே, இரு நீதிபதிகள் அமர்வில் அந்த மனு விசாரிக்கப்பட்டது. 'தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, விசாரணையை வரும் 21க்கு தள்ளி வைக்கிறோம்' என அறிவித்தனர்.

இதற்கு எதிராக, பட தயாரிப்பு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''பொங்கல் பண்டிகையையொட்டி, ஜன., 9ல், படம் வெளியாகும் என, ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இந்தியா முழுவதும், 5,000 திரையரங்குகளில் படம் வெளியாக இருந்தது; டிக்கெட்டுகள் விற்பனையும் நடந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் திரைப்படத்தில் 10 காட்சிகளை நீக்கினால் தான், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தரப்படும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. எனவே, இதில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தை நீங்கள் அணுகி இருப்பது மிகவும் அதிவேகமான செயல்பாடு.

இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில்,வரும் வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்?

அதோடு, படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை வாரியம் சொன்னபின், அதை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.

அதனால், உங்கள் மனுவை விசாரிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனவே, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

-டில்லி சிறப்பு நிருபர்- .

Advertisement