குத்துச்சண்டை: பைனலில் லவ்லினா

கிரேட்டர் நொய்டா: தேசிய குத்துச்சண்டை பைனலுக்கு லவ்லினா நிஹாத் ஜரீன் முன்னேறினர்.
உ.பி.,யில் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. 10 பிரிவுகளில் இந்தியா முழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. 51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை பதக்கம் வென்ற நிஹாத் ஜரீன், உ.பி.,யின் குசும் பஹலை 4:1 என்ற கணக்கில் சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தார்.
75 கிலோ பிரிவு அரையிறுதியில் அசாமின் லவ்லினா, 5:0 என உ.பி.,யின் இம்ரோஸ் கானை சாய்த்து, பைனலுக்கு முன்னேறினார். ஹரியானாவின் பூஜா ராணி (80 கிலோ), 5:0 என உ.பி.,யின் ஸ்நேகாவை வீழ்த்தினார். மற்ற அரையிறுதி போட்டிகளில் மீனாட்ஷி ஹூடா (48), பிரீத்தி (54), அருந்ததி (70) வெற்றி பெற்றனர்.
ஆண்கள் 55 கிலோ பிரிவு அரையிறுதியில் சர்வீசஸ் வீரர் ஜடுமானி சிங், 5:0 என சக வீரர் அமித் பங்கலை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் சர்வீசஸ் வீரர் நரேந்தர் (90+), பெட்ரோலிய அணியின் நமன் (90) வென்றனர்.

Advertisement