சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

மதுரை: 'பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு; சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் கண்துடைப்பு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது' என பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கைப்படி பணிநிரந்தரம் செய்திருந்தால் போராட்டத்தின்போது பகுதிநேர ஆசிரியர் கண்ணன் இறந்திருக்க மாட்டார். உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கி, மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. பணிநிரந்தரம் செய்யவே போராட்டம். உயிரிழந்த கண்ணனின் உணர்வில் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களும் உள்ளனர். சம்பள உயர்வு வழங்கியதன் மூலம் பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என தி.மு.க., தெளிவாக்கியுள்ளது. அரசின் சம்பள உயர்வு நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அரசு சலுகைகள் கிடைக்க பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பொங்கல் போனஸ், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஓட்டுக்காக இலவசங்கள் கொடுக்க நிதி உள்ளது. ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மனம் இல்லையா. மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற சாக்கு போக்கை சொல்லியே இனியும் ஏமாற்ற வேண்டாம். இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர அறிவிப்பை உடன் வெளியிட வேண்டும் என்றார்.

Advertisement