பயங்கரவாத கூடமாக மாறும் பிரிட்டன் பல்கலைகள்; உதவி தொகையை நிறுத்தியது யு.ஏ.இ.,

19


லண்டன்:
பிரிட்டன் பல்கலைகளில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வந்த யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தற்போது அங்கு உள்ள பல்கலைகள் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் பிடியில் இருப்பதாக கூறி, உதவித்தொகையை நிறுத்தி உள்ளது.


ஐரோப்பிய நாடான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உயர் கல்வி படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களுக்கு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவித்தொகை வழங்கி வருகிறது.



இந்த உதவித்தொகை திட்டம், சிறந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம், தினசரி செலவு,
பயணம், மருத்துவ காப்பீடு என அனைத்தையும் வழங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் பல்கலையில் படிக்கும் யு.ஏ.இ., மாணவர்களுக்கான உதவித்தொகையை அந்நாட்டு கல்வி அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.


இது குறித்து பிரிட்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரிட்டன் பல்கலைகளில், 'முஸ்லிம் பிரதர்ஹுட்' அமைப்பு இயங்குகிறது. இதை பயங்கரவாத அமைப்பாக யு.ஏ.இ., வகைப்படுத்தி உள்ளது. இந்த அமைப்பு பல்கலை மாணவர்களை பயங்கரவாத கருத்துக்குள் இழுப்பதாக குற்றஞ்சாட்டி, அவற்றை பல்கலை வளாகங்களில் தடை செய்ய பிரிட்டன் அரசிடம் வலியுறுத்தி இருந்தது.


அது ஏற்கப்படாததால், பிரிட்டன் பல்கலையில் படிக்கும் தங்கள் நாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகையை யு.ஏ.இ., நிறுத்தியுள்ளது. அதே சமயம் மற்ற நாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையை தொடர்ந்து வழங்குகிறது.



ஆண்டுதோறும் 8,000க்கும் மேற்பட்ட யு.ஏ.இ., மாணவர்கள் பிரிட்டன் பல்கலையில் சேருகின்றனர். உதவித்தொகை நிறுத்தத்தால் இந்த எண்ணிக்கை கடுமையாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement