'சீட்' வாங்க விதவிதமாக யோசிக்கும் தி.மு.க.,வினர்!

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''வளர்ச்சி திட்டங்களை முடுக்கி விட்டிருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தமிழக கிராமப்புறங்கள்ல, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நிறைய வளர்ச்சி பணிகளை செய்யுதாவ... இந்த துறையின் இயக்குநரான பொன்னையா, 'சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்குள்ள, கிராமப்புறங்கள்ல செய்துட்டு இருக்கிற வளர்ச்சி பணிகளை, 100 சதவீதம் முடிக்கணும்'னு அதிகாரிகளை முடுக்கி விட்டிருக்காரு வே...

''இதுக்கு ஏதுவா, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துறை ரீதியா தரப்பட்டிருந்த சின்ன, சின்ன தண்டனைகளை எல்லாம் ரத்து பண்ண சொல்லிட்டாரு... 'அப்பதான், அவங்க முழுவீச்சா களத்தில் இறங்கி வேலை பார்ப்பாங்க'ன்னு சொல்லுதாரு வே...

''அதேபோல, தகுதி, சீனியாரிட்டி அடிப் படையில், பதவி உயர்வு கிடைக்காம தவிச்சவங்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்காரு.. . 'கிராமப்புறங்கள்ல எந்த பணிகளும் பெண்டிங்குல இருக்குன்னு யாரும் குறை சொல்லாம பார்த்துக்கிடுங்க'ன்னும் கண்டிப்பா உத்தரவு போட்டிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''இடமாறுதல்ல ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''துாத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறையிலும், கூட்டுறவு பண்டகசாலையிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கு... போன மாசம், கூட்டுறவு துறையில் நாலு அதிகாரிகளை இடமாறுதல் பண்ணி, மண்டல இணை பதிவாளர் ராஜேஷ் உத்தரவு போட்டாருங்க...

''இந்த உத்தரவை போட்டு ஒரு மாசமாகியும், நாலு பேரும் இன்னும் பணியில் இருந்து விடுபடாம, அதே இடத்துல வேலை பார்த்துட்டு இருக்காங்க... ஏன்னா, 'உடனே அவங்களை பணியில் இருந்து விடுவிக்கணும்'னு ஒரு சங்கமும், 'இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யணும்'னு இன்னொரு சங்கமும், மாறி மாறி அறிக்கை விட்டுட்டு வர்றதுதான் இந்த இழுபறிக்கு காரணம்...

''இந்த பஞ்சாயத்து, கூட்டுறவு துறை தலைமை அலுவலகம் வரைக்கும் போயிருக்கு... அப்படி இருந்தும், இடமாறுதல் செய்யப்பட்டவங்க, இன்னும் பழைய இடத்துல பணியில நீடிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ரூம் போட்டு யோசிப்பாங்களான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலரும், சட்டசபை தேர்தல்ல, 'சீட்' வாங்க பல தந்திரங்களை செய்றாங்க... செயற்குழு உறுப்பினர் சுகுமாரும், விளையாட்டு அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணனும், பல லட்சம் ரூபாய் செலவுல, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட்டு இருக்காங்க பா...

''இன்னொரு பக்கம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனும், தன் பங்குக்கு புதுசு புதுசா நிகழ்ச்சிகளை நடத்துறாரு... எழிலரசனின் இன்ஷியல், சி.வி. எம்.பி., என்பதால, 'சில் வித் சிவிஎம்பி, வாங்க பேசலாம்'னு தொகுதி மக்களை பார்த்து, குறைகளை கேட்கிறாரு பா...

''இதை பார்த்துட்டு, 'மூணாவது முறையா சீட் வாங்க, எழிலரசன் புதுசு புதுசா யோசிக்கிறார்'னு, அவரது எதிர் கோஷ்டியினர் கிண்டல் அடிக்கிறாங்க... இன்னொரு குரூப்போ, சத்தமில்லாம உதயநிதி ரூட்டை பிடிச்சி, சீட்டுக்கு காய் நகர்த்திட்டு இருக்குது பா... '' என முடித்தார், அன்வர்பாய்.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement