மும்பை அணி முதல் வெற்றி: நாட் சிவர், ஹர்மன்பிரீத் அரைசதம்

நவி மும்பை: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி 50 ரன் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.


நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் ('டி-20') போட்டியில் டில்லி, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு அமேலியா கெர் (0) ஏமாற்றினார். கமலினி (16) நிலைக்கவில்லை. பின் இணைந்த நாட் சிவர்-புருன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய நாட் சிவர், 32 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த போது ஸ்ரீ சரணி பந்தில் நாட் சிவர் (70 ரன், 46 பந்து, 13x4) அவுட்டானார்.


மின்னு மணி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹர்மன்பிரீத், 34 பந்தில் அரைசதம் கடந்தார். நிகோலா கேரி (21) ஆறுதல் தந்தார். ஸ்ரீ சரணி வீசிய கடைசி ஓவரில் 4 பவுண்டரி உட்பட 19 ரன் விளாசினார் ஹர்மன்பிரீத்.

மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் (74 ரன், 3x6, 8x4), சஜனா (5) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் நந்தனி சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.


சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷைபாலி வர்மா (8), கேப்டன் ஜெமிமா (1), லாரா வோல்வார்ட் (9), மரிஜான் காப் (10) ஏமாற்றினர். சின்னெல்லே (56) ஆறுதல் தந்தார். டில்லி அணி 19 ஓவரில் 145 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. மும்பை சார்பில் நிகோலா, அமேலியா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement