ரூ.40,000 கோடி திரட்ட 'ஜியோ' திட்டம்

இந்தாண்டு பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ, தன் 2.50 சதவீத பங்குகளை விற்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, கிட்டத்தட்ட 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த நவம்பரில், முதலீட்டு வங்கியான ஜெப்பரீஸ், ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 180 பில்லியன் டாலர் என மதிப்பிட்டிருந்தது.

இதன்படி, 2.50 சதவீத பங்குகள் விற்பனை வாயிலாக 40,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. கடந்தாண்டு ஐ.பி.ஓ., வாயிலாக 'ஹூண்டாய் இந்தியா' நிறுவனம் திரட்டிய 27,800 கோடி ரூபாயை விட இது மிக அதிகமாகும்.

'ஆபர் பார் சேல்'முறையிலா அல்லது புதிய பங்கு விற்பனை வாயிலாகவா என்பது குறித்து ஜியோ இன்னமும் முடிவு செய்யவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் ஐ.பி.ஓ., சந்தையில் காணப்படும் வளர்ச்சிக்கு, ஜியோவின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கிடையே, பெரிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும்போது, குறைந்தபட்ச அளவு பங்கு விற்பனையை 5 சதவீதத்தில் இருந்து 2.50 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ள செபி, மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

Advertisement