பயன்பாடின்றி எரிவாயு தகனமேடை பொன்னேரியில் ரூ.1.44 கோடி வீண்

பொன்னேரி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவாயற்பாடி கள்ளுக்கடைமேடு பகுதியில், 2022ம் ஆண்டு 1.44 கோடி ரூபாயில், 2,800 சதுரடி பரப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பின், 2024ல் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சமூக நல அறக்கட்டளை மூலம், எரிவாயு தகனமேடை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. சடலங்களை எரியூட்ட 3,650 ரூபாய் என, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் தனிநபர்கள் சிலரின் வருவாய் பாதிக்கிறது என்றும், அவர்களின் எதிர்ப்பால் எரிவாயு தகனமேடை திட்டம் முடங்கியுள்ளது.

இறந்தவர்களின் சடலங்களை திறந்தவெளியில் எரிக்கும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்க கொண்டு வரப்பட்ட இத்திட்டம் செயல்பாடின்றி, பழைய நிலையே தொடர்வது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, எரிவாயு தகனமேடையை முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement