கோவிலுக்கு சென்ற இருவர் மீது தாக்குதல்: 7 பேருக்கு வலை

திருத்தணி: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு வாலிபர்களை வழிமறித்த ஏழு பேர் கொண்ட கும்பல், இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் , 30. இவர், நேற்று முன்தினம் பொங்கல் விழாவையொட்டி, நண்பர் கலையரசனுடன் இருசக்கர வாகனத்தில் தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், முருகூர் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லேசாக கார் உரசியது.

இதனால், கார் ஓட்டுநர் மற்றும் மணிவண்ணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் சமரசம் அடைந்தனர்.

பின், குமாரகுப்பம் அருகே, ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென மணிவண்ணனின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, இரும்பு ராடால் மணிவண்ணன், கலையரசனை தாக்கிவிட்டு தப்பியது.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும், அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement