ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொன்னேரி: பெரும்பேடு - பெரும்பேடுகுப்பம் சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக மாறியிருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் இருந்து, பெரும்பேடுகுப்பம் கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன.

பெரும்பேடுகுப்பம் கிராம மக்கள் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட தேவைகளுக்கு பெரும்பேடு வழியாக பொன்னேரி வந்து செல்கின்றனர்.

போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை இருப்பதால், கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களில் சிக்கி, கீழே விழுந்து சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement