ஜாதி பெயரை நீக்கும் உத்தரவு: ஐகோர்ட் இடைக்கால தடை

8

சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் பெயரில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'சங்கங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்டத் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜரானார்.

சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்ற, தனி நீதிபதி உத்தரவை, தென்னிந்திய செங்குந்த ம காஜன சங்கத்துக்கு அமல்படுத்த இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்., 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement