'ஜெயலலிதா மகள்' என கூறியவரை விரட்டியடித்த அ.தி.மு.க., தொண்டர்கள்

16

சென்னை: ஜெயலலிதா மகள் எனக் கூறி, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வந்த ஜெயலட்சுமியை, அக்கட்சியினர் விரட்டியடித்தனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம், கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 23 வரையும், 28 முதல் 31ம் தேதி வரையும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அப்போது விருப்ப மனு பெற்றவர்கள், அவற்றை பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பிக்குமாறு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னை ஜெயலலிதா மகள் எனக் கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட, கடந்த டிசம்பரில் விருப்ப மனு பெற்றதாக கூறப்படுகிறது. விருப்ப மனு பெற்றவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்று காலை, பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

அப்போது, அங்கு கரில் வந்த ஜெயலட்சுமி, தனக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்திருப்பதாகக் கூறி, அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார். அவரை, அங்கிருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், 'நேர்காணலுக்கு வரக்கூடாது' எனக்கூறி தடுத்து, விரட்டி அடித்தனர்.

பின்னர் பேட்டியளித்த ஜெயலட்சுமி, ''ஜெயலலிதா இருக்கும்போதே, நான் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை பெற்றுள்ளேன். ஆண்டிபட்டியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததை அடுத்து, என்னை நேர்காணலுக்கு வருமாறு அழைத்தனர். அதன் அடிப்படையிலேயே, தலைமை அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. கட்சியினர் என்னை அசிங்கமாக திட்டி, அடித்து வெளியேற்றினர். சிலர் கற்களை வீசி தாக்கினர். இதை, கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமி உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்,'' என்றார்.

Advertisement