தங்கம் வென்றார் தன்யா: சங்கிலி குண்டு எறிதலில்

மங்களூரு: அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டுக்கான சங்கிலி குண்டு எறிதலில் தன்யா தங்கம் வென்றார்.

மங்களூருவில், அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டு 85வது சீசன் நடந்தது. பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் பைனலில், சண்டிகர் பல்கலை.,யின் சர்வதேச வீராங்கனை தன்யா சவுத்ரி 22, அதிகபட்சமாக 65.60 மீ., எறிந்து தங்கம் வென்றார். இது, 2017ல் தேசிய சாதனை படைத்த சரிதா சிங் (65.25 மீ.,) எறிந்த துாரத்தை விட 35 செ.மீ., அதிகம். ஆனால் அனைத்து இந்திய பல்கலை., விளையாட்டு, சர்வதேச தடகள கூட்டமைப்பின் அங்கீகாரம் இல்லாததால் தேசிய சாதனையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இருப்பினும் தன்யா, தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 63.91 மீ., எறிந்திருந்தார்.
ஆசிய விளையாட்டில் (2023, 60.50 மீ., 7வது இடம்) பங்கேற்ற தன்யா, கடந்த ஆண்டு நடந்த 'கேலோ இந்தியா' பல்கலை., விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார்.
இப்போட்டியில் வெள்ளி, வெண்கலத்தை முறையே நந்தினி (61.84 மீ.,), கிரிமா (56.46 மீ.,) கைப்பற்றினர்.

Advertisement