ஆப்கனில் இந்திய மருந்துகளுக்கு அதிகரிக்கும் மவுசு: பாகிஸ்தான் மருந்துகளை தவிர்க்கும் மக்கள்


புதுடில்லி: பாகிஸ்தான் மருந்து பொருட்கள் ஆப்கானிஸ்தானில் விரும்பி வாங்கப்பட்ட நிலையில், மிகவும் குறைந்த விலையில் தரமாக வழங்குவதால், இந்திய மருந்து பொருட்களுக்கு அங்கு விருப்பம் அதிகரித்துள்ளது.


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், 2021 முதல் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, சுகாதார துறை மிகவும் பலவீனமானதை அடுத்து, மருந்து தயாரிப்புகள் வெகுவாக குறைந்தன. இதையடுத்து, தன் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பெரும்பாலான மருந்து, மாத்திரைகளை ஆப்கானிஸ்தான் வாங்கி வந்தது.புவியியல் ரீதியாக அருகில் இருந்ததால், பாகிஸ்தானில் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்வது சுலபமாக இருந்தது.


கடந்த 2024ல் மட்டும், 1,694 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை ஆப்கனுக்கு பாக்., வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, ஆப்கனில் இருந்த தோர்க்கம் மற்றும் சாமன் எல்லைகள் மூடப்பட்டு மருந்து வரத்துகள் குறைந்தன.


அதேசமயம், அந்நாட்டு மருந்துகளின் தரம் குறைந்ததை அடுத்து, கடந்த நவம்பரில் அவற்றிற்கு ஆப்கான் துணை பிரதமர் அப்துல் கனி பரதர் தடை விதித்தார். வர்த்தகர்கள், இந்தியா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிடம் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்து கொள்ளவும் உத்தரவிட்டார். இது, ஆப்கானில், கடுமையான மருந்து தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தது. இதய நோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கையிருப்பில் இருந்த மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. போலி மருந்துகளும் புழக்கத்திற்கு வந்தன.


இந்த சூழலில், அங்கு நிலவும் நிலையை கருத்தில் கொண்டு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 73 டன் உயிர் காக்கும் மருத்துவப் பொருட்களை அவசரமாக விமானம் வாயிலாக ஆப்கன் தலைநகர் காபூலுக்கு அனுப்பி வைத்தார். கடந்தாண்டு இறுதியில், மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா மற்றும் ஆப்கானின் சுகாதார துறை அமைச்சர் மவுலவி நூர் ஜலால் ஜலாலிக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, மருந்து பொருட்கள் அனுப்புவது தொடர்பான உறவு இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்தது.


கடந்தாண்டு நவம்பருக்கு முன்பாக, ஆப்கானின் மருந்து சந்தையில், பாகிஸ்தானின் பங்கு 35 - 40 சதவீதமாக இருந்த நிலை, தற்போது மாறியுள்ளது. ஆப்கனுக்கான இந்தியாவின் மருந்து ஏற்றுமதி தற்போது 900 கோடி ரூபாயாக உள்ளது. அதுமட்டுமின்றி, அங்குள்ள மக்கள், இந்திய சந்தையில் தயாரான மருத்துவ பொருட்களையே அதிகம் விரும்பி வாங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறைந்த விலை, சிறந்த தரம் என்பதாலேயே இந்திய சந்தையில் தயாரான மருந்துகள் அங்கு பெருமளவு விரும்பப்படுவதாக கூறப்படுகிறது.


பிற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் மருந்துகளை விட, இந்திய மருந்துகள் நான்கு மடங்கு விலை குறைவாக இருப்பதாலேயே அவற்றிற்கான விருப்பம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே கையிருப்பில் உள்ள பாகிஸ்தான் உட்பட பிற நாட்டு மருந்துகளைவிட இந்திய மருந்துகளை வாங்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆர்வம் காட்டி வருவதும் அதிகரித்துள்ளது.

Advertisement