கடல்மங்கலம் வழியாக பேருந்து சேவை துவக்கம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் இருந்து, கடல்மங்கலம், சாலவாக்கம் வழியாக அரசு பேருந்து சேவை நேற்று துவங்கப்பட்டது.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம், தோட்டநாவல், சடச்சிவாக்கம், மல்லியங்கரணை உள்ளிட்ட கிராமங்கள் செங்கல்பட்டு செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லாத நிலை நீண்ட காலமாக இருந்தது.

இப்பகுதியினர், உத்திரமேரூர் அல்லது நெல்வாய் கூட்டுச்சாலை சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செங்கல்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், உத்திரமேரூர்- செங்கல்பட்டு இடையே நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த இக்கிராம வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று, உத்திரமேரூரில் இருந்து, கடல்மங்கலம், குண்ணவாக்கம், சாலவாக்கம், எஸ்.மாம்பாக்கம், சிறுபினாயூர், வடபாதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செங்கல்பட்டுக்கு தினமும் நான்கு முறை இயங்கும் வகையில், தடம் எண்; 68 எஸ்., அரசு பேருந்து சேவை நேற்று துவங்கப்பட்டது.

Advertisement