சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு 5 வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்

கடலுார்: கடலுார் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து, 5 வது நாளாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை தொடர்கின்றனர்.

கடலுார் முதுநகர், சிப்காட் பகுதியில், 50க்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் சிப்காட் விரிவாக்கத்திற்காக தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு உள்ளிட்ட கிராம எல்லைகளில், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் 360கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகபடுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சிப்காட்டால் ஏற்கனவே இப்பகுதியில் காற்று, நீர் மாசுபட்டு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிப்காட்டை விரிவாக்கம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசாணையை திரும்ப பெறக்கோரி, கடந்த 6ம் தேதி முதல் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்து நாட்களாகியும் சமாதானம் ஏற்படாததால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிப்காட் விரிவாக்க அரசாணையை திரும்பப்பெறும் வரை வீடுகளிலிருந்து கருப்புக் கொடியை அகற்ற மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement