பெட்டி கடைக்காரரிடம் ரூ.7.61 லட்சம் அபேஸ் கன்னியாகுமரியில் மோசடி ஆசாமி கைது

கடலுார்: பெட்டி கடைக்காரரிடம் லோன் வாங்கித்தருவதாக கூறி, 7லட்சத்து 61ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, கடலுார் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வம்,50; இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவரது கடைக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் பெருமாள்,36; வந்தார்.

அவர் தன்னை பே.டி.எம்., மூலம் லோன் வாங்கித்தரும் தொழில் செய்து தருவதாகக்கூறினார். அதை நம்பிய செல்வம் தனக்கு 20 லட்ச ரூபாய் கடன் வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு பெருமாள், உங்கள் பே.டி.எம்., செயலியை பார்த்துவிட்டுச்சொல்கிறேன் எனக்கூறி, செல்வத்தின் மொபைலை வாங்கினார். அதன் தகவல்களை பெற்று செல்வத்தின் வங்கி கணக்கிலிருந்து, 7 லட்சத்து 61ஆயிரத்து 50 ரூபாயை, தனது வங்கி வங்கி கணக்கிற்கு பெருமாள் மாற்றி சென்று விட்டார்.

பின்னர் செல்வம், தனது வங்கிக்கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்ய முயற்சித்தபோது, கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தது.

வங்கி பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது, பெருமாளின் கணக்கிற்கு தன்னுடைய பணம் சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடன் வாங்கித்தருவதாக் கூறி தன்னுடைய பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலுார் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மோசடி நபர், கன்னியாகுமரி அடுத்த குலசேகரத்தில் தங்கியிருப்பதை அறிந்து நேற்று கைது செய்தனர். கடன் வாங்கித்தருவதாகக் கூறி, பெட்டி கடைக்காரரின் பணத்தை அபேஸ் செய்தது, சிதம்பரம் பகுதி வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement