அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி

13

சேலம்:அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் பற்றி கால சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.


சேலம் மாவட்ட அதிமுக சார்பில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி மேச்சேரி சாலை, காரப்பட்டி பள்ளம் பகுதியில் இன்று காலை பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு வரவேற்பு வழங்கப்பட்டு தமிழர் பாரம்பரிய முறைப்படி 108 பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.
மயிலாட்டம், ஒயிலாட்டம், வள்ளிகும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிறகு இபிஎஸ் சிறப்புரையாற்றினார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு :

கேள்வி: போராட்டத்தில் ஆசிரியர் இறந்திருக்கிறாரே?
பதில்: இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறேன். திமுக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லித்தான் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்குறுதியை கொடுக்கின்றபோதே இதை அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். வாக்குறுதியைக் கொடுத்து அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். அதனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அவர்கள் போராடுகிறார்கள்.

கேள்வி: கூட்டணிக்கு இன்னும் எத்தனை கட்சிகள் வரும்?


பதில்: சில கட்சிகள் வரும். வந்தவுடன் நாங்கள் சொல்கிறோம். இப்போதே எல்லாம் பகிரங்கமாக சொல்ல முடியுமா? எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா இருக்காதா என்பது சந்தேக நிலைக்கு வந்துவிட்டது.
கேள்வி: இந்தியை காங்கிரஸ் கட்சிதான் திணித்ததாக ஒரு திரைப்படம் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் மையக் கருத்து அப்படி இருக்கும்போதே அவர்களுடனே கூட்டணியில் இருக்கிரார்களே?


பதில்: மொழிப்போரின்போது அதிமுக, திமுக ஆகிய இரண்டும் ஒரே கட்சியாகத்தான் இருந்தது. மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் கூட்டமே நடத்துவோம். அந்த காலகட்டம் வேறு. அதைப் படமாக எடுத்திருக்கிறார்கள். அதை வைத்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அந்த கால சூழ்நிலையில் நம் முன்னோர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக போராடினார்கள்.

கேள்வி: புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி?


பதில்: இந்த ஓய்வூதிய திட்டமே நாடகம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த திட்டத்தை அப்படியே பூசி ஊழியர்களை நம்பவைக்கிற மாதிரி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதில் புதிதாக ஏதும் இல்லை. ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்திருக்கிறார்கள். அதில் பிரைஸ் இண்டெக்ஸ் என்று இருக்கிறது. இதில் அகவிலைப்படி என்று இருக்கிறது. அதுதான் மாற்றம் வேறு எதுவுமே கிடையாது.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான் அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு இல்லை. இப்போது திமுக அரசு இன்றைய தினம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு இருக்கிறது. இதில் என்ன புதிதாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்? அரசு ஊழியர்கள் கேட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டபடி சில சங்கங்களை சரிக்கட்டி ஆதரவு பெற்றதாக எனக்கு தெரிகிறது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதை ஏற்கவில்லை. அதை நான் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்.
கேள்வி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வாய்ப்பு உள்ளதா?

பதில்: அதையெல்லாம் கால சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி முடிவு எடுக்கப்படும். எங்களைப் பொறுத்தவரை எது நடக்குமோ அதைத்தான் சொல்லுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. திமுகவைப் பொறுத்தவரை ஓட்டுக்காக ஆட்சி செய்கிறார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் நிறைவேற்றாததால்தான் பலரும் போராடுகிறார்கள்.

Advertisement