எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் 'கவுன்டிங் சென்டர்'  அமைகிறது! சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் 'ஜரூர்'

திருப்பூர்: சட்டசபை தேர்தலில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. எனவே, அதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல், பிப், மாத இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியினர், கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்திய தேர்தல் கமிஷன், தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க களமிறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிந்து, விரைவில் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது.

அதற்கு பின், தேவைக்கு ஏற்ப, ஓட்டுச்சாவடிகள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட தேர்தல் 'ஸ்ட்ராங் ரூம்' வளாகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்ப்பு வேகமாக நடந்து வருகிறது.

எல்.ஆர்.ஜி. கல்லுாரி இந்நிலையில், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைவிடத்தை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம், திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள எல்ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கலாம் என, பரிந்துரைத்துள்ளது.

அதன்தொடர்ச்சியாக, திருப்பூர் வடக்கு / தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணியும், அதற்கான வரைபட தயாரிப்பு பணியும் வேகமெடுத்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நில அளவை பிரிவினரின் கண்காணிப்பில், வரைபடம் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், 2011, 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல், 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், எல் .ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் தான் அமைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு மிக அருகே இருப்பதால், மிகவும் பயன்பாட்டுக்கு வசதியாக இருக்கும்.

அதன்படி, வரும் சட்டசபை தேர்தலுக்கும், எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்திலேயே ஓட்டு எண்ணிக்கை மையம் அமைய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்காக, தொகுதி வாரியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் 'ஸ்ட்ராங் ரூம்' அமைவிடம், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைவிடம் குறித்து, தெளிவான வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அதன்பின், முழுமையான வரைபட அறிக்கையுடன், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். ஓட்டுப்பதிவு நெருங்கும் நேரத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்படும். கண்காணிப்பு கேமராக்கள், கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி, ஓட்டு எண்ணிக்கை மையத் தடுப்பு அமைக்கும் பணி, 'ஸ்ட்ராங் ரூம்' தரையில் பெயின்ட் அடித்து ஓட்டுச்சாவடி எண் எழுதும் பணிகள், படிப்படியாக நடக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement