பிஎச்.டி., படிக்க வைத்துள்ளேன்; பால்வாடிக்கு போய் விடாதீர்கள்: தாவலை தடுக்க திருமாவளவன் கடும் முயற்சி

47

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில், மாவட்டச் செயலர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்போரை, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சமாதானப்படுத்தி வருகிறார்.


'இங்கு உங்களை எல்லாம் படிக்க வைத்து, பட்டதாரி ஆக்கி இருக்கிறேன்; த.வெ.க., போன்ற கட்சியில் சேர்ந்து, பால்வாடியில் படிக்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்' என, அவர் கூறி வருகிறார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சட்டசபை தொகுதி வாரியாக மாவட்டச் செயலர்கள், லோக்சபா தொகுதி வாரியாக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் ஓரிரு மாவட்டங்களை இணைத்து, மாநிலச் செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சமாதான முயற்சி



குறிப்பாக, 234 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலர்களை நியமித்து, சமீபத்தில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலர்கள், அந்தந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.



ஆனால், வேறு தொகுதியில் வாக்காளர்களாக இருப்பவர்களும், மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, வி.சி., நிர்வாகிகள் பலர், தலைமைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளில் சேரவும் பேச்சு நடத்தி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் இறங்கி உள்ளார். இதற்காக, ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும், சந்திக்கும் கட்சியினரிடமும், 'நடிகர் விஜய் கட்சிக்கு யாரும் தாவ வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்து வருகிறார்.


சமீபத்தில், கட்சி உள்ளரங்க கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியுள்ளதாவது:அரசியலில், 35 ஆண்டுகளாக உங்களுக்கு, 'அ' போடச் சொல்லி கற்றுக் கொடுத்தவன் இந்த திருமாவளவன். அம்பேத்கர் அரசியலை விட்டுவிட்டு, சினிமாவில் பிரபலமாக இருப்பவர் திடீரென கட்சி ஆரம்பித்திருப்பதால், அவருடன் போகலாம் என முடிவு செய்யாதீர்கள்.

அனைவரும் தலைவர்



அரசியலில் உங்கள் அனுபவமே விஜய்க்கு கிடையாது; இப்போது அவர் பால்வாடி பையன். உங்களை நான், பட்டப் படிப்பு படிக்க வைத்து, பிஎச்.டி., முடித்து ஆளாக்கி வைத்திருக்கிறேன். நீங்கள் போய், பால்வாடி பள்ளியில் இருக்கக்கூடிய பையனை தலைவராக ஏற்கக் கூடாது.



இத்தனை ஆண்டுகளாக நீங்கள் படித்த அம்பேத்கர் என்ற பிஎச்.டி., படிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். நீங்கள் போய் தான், அங்கு அரசியல் கற்று தர வேண்டிய நிலை இருக்கும். நம் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலைவராக வளர்ந்திருக்கின்றனர். மேலும், அரசியல் விவாதத்தில் பங்கேற்கும் பலர், வி.சி.,யைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்; இல்லையென்றால், இங்கிருந்து போனவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


இதற்கிடையில், த.வெ.க.,வுக்கு போவதை தடுக்க, கட்சி நிர்வாகிகள் மட்டத்திலும் திருமாவளவன் பேச்சு நடத்தி வருகிறார். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, கட்சியில் வேறு முக்கிய பதவிகள் தரப்படும் என்றும், யாரும் கட்சியை விட்டு த.வெ.க., போன்ற கட்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் திருமாவளவன் கூறி வருகிறார்.


அத்துடன், தி.மு.க., கூட்டணியில் பெறப்படும் தொகுதிகள் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளிலும் பதவிகள் வாங்கி தரப்படும் என்றும், அவர் உறுதி அளித்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement