ஜி.ஹெச். டாக்டர் எண்ணிக்கை உயர்கிறது

திருப்பூர்: பயிற்சி டாக்டர்கள் நுாறு பேர் இணைய உள்ளதால், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் சேவை மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, கடந்த 2022 ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களாக இணைந்தவர்கள், வரும் மார்ச் மாதத்துடன் 'தியரி' தேர்வுகளை நிறைவு செய்கின்றனர். மே மாதம் செய்முறை வகுப்புகள் துவங்குகின்றன. ஒரு ஆண்டு காலம் பயிற்சி மருத்துவர்களாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலேயே பணியாற்ற உள்ளனர்.

அறுவை சிகிச்சை மற்றும் ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைகள்; அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகள்; பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு; நோயாளிகளை அணுகும் முறை மற்றும் மேலாண்மை ஆகிய வற்றில் பயிற்சி பெறுவர்.

தற்போது மருத்துவமனையில் டீன், மருத்துவ நிர்வாக அலுவலர் மற்றும் உதவி அலுவலர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். சிக்கலான அறுவை சிகிச்சைகள் மற்றும் உடல் உறுப்பு தானம் போன்ற அவசர காலங்களில் 40 பேர் கொண்ட மருத்துவக் குழு உடனடி நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 2,500 - 2,800 புறநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

புதிதாக இணைய உள்ள 100 பயிற்சி மருத்துவர்களையும் சேர்த்து, மருத்துவமனையின் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயரும்.

புறநோயாளிகள் பிரிவு மற்றும் வார்டுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறையும். பிரசவத்திற்குப் பின்பான கவனிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வார்டுகளில் நோயாளிகளுக்குத் தரமான கண்காணிப்பு கிடைக்கும். குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் கூடுதல் பலம் சேரும்.

நோயாளிகளுக்கு சேவை துரிதமாகும்: தற்போது போதிய எண்ணிக்கையிலான மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும், பயிற்சி மருத்துவர்கள் இணையும் போது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அது கூடுதல் பலமாக அமையும். நோயாளிகளுக்கான சேவை இன்னும் துரிதப்படும்.

-மனோன்மணி: டீன்:

Advertisement