இ.கம்யூ., தலைவர் ஜீவானந்தம் நினைவஞ்சலி
கோவை: இ.கம்யூ., முக்கிய தலை வர்களில் ஒருவரான மறைந்த ப.ஜீவானந்தத்தின் 63ம் ஆண்டு நினைவஞ்சலி, கோவை மாவட்ட அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஜீவானந்தம் சிலைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், இந்திய மாதர் தேசிய சம்மேளத்தின் மாவட்ட செயலாளர் பேபி, இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்ட தலைவர் அபிமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம் பேசுகையில், ''ஜீவா வாழ்ந்த காலத்தில், கட்சிக்கும், தமிழுக்கு ஆற்றிய பணிகள் முக்கியமானதாகும். தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் குரல் கொடுத்தார்.
அரசியல் தலைவர்களில் மிக எளிமையாக வாழ்ந்தவர். காந்தி சிரா வயலுக்கு வந்து, அவரை நேரில் சந்தித்து, 'ஜீவா நீங்கள்தான் நாட்டின் சொத்து' என்று பாராட்டி சென்ற சம்பவத்தை மறக்க முடியாது'' என்றார்.