கியூபாவின் அடுத்த அதிபர்; கேள்விக்கு அதிபர் டிரம்ப் அதிர்ச்சி பதில்

2

வாஷிங்டன்: கியூபாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகக் கூறி, வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்து, தங்கள் நாட்டு சிறையில் அடைத்துள்ளது. வெனிசுலா மீதான இந்த தாக்குதலுக்கு சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.


வெனிசுலாவைத் தொடர்ந்து, கொலம்பியா, மெக்சிகோ மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். அதேபோல, வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கும் அவர் மிரட்டல் விடுத்திருந்தார். அமெரிக்காவின் தலையீடின்றி கியூபா தானாகவே வீழும் என்றும், விரைவில் கியூபா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

அதேபோல, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவும், வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கியூபா அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார். இது உலக நாடுகளிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஒருவேளை கியூபாவை அமெரிக்கா கைப்பற்றினால், அதன் அதிபராக மார்கோ ரூபியோ நியமிக்கப்படுவாரோ? என்று நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "இது கேட்க நன்றாக இருக்கிறது," என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பதிவு கியூபாவை எரிச்சலடையச் செய்துள்ளது.



மேலும், அவர் விடுத்த மற்றொரு பதிவில்; கியூபா பல ஆண்டுகளாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் பணத்தை அதிகளவில் பெற்று பிழைத்து வந்தது. அதற்கு பதிலாக, கியூபா கடந்த இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. கடந்த வாரம் வெனிசுலாவில் நடந்த அமெரிக்க தாக்குதலில் கியூபாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டனர். மேலும் பல ஆண்டுகளாக அவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த கும்பல்களின் பாதுகாப்பு இனி வெனிசுலாவுக்கு தேவையில்லை.

வெனிசுலாவுக்கு இப்போது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கியூபாவுக்கு இனி எண்ணெய் அல்லது பணம் எதுவும் செல்லாது. தாமதிக்காமல் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளுமாறு கடுமையாக பரிந்துரைக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement