ஆட்சியில் பங்கு: செல்வபெருந்தகையை சூப்பர் அண்ணா என பாராட்டிய மாணிக்கம் தாகூர்

சென்னை: ஆட்சியில் பங்கு தொடர்பான செல்வப்பெருந்தகை கருத்துக்கு அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சுதா உள்ளிட்ட பலரும் இதை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், ராகுலுக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் இதையே பேசி வருகின்றனர். தொடரும் இத்தகைய வலியுறுத்தல்கள் திமுக தலைமையிடம் புகைச்சலை ஏற்படுத்த, இதுகுறித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.

அவரின் கருத்துக்கு பதில் தரும் விதமாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை,, ஆட்சியில் பங்கு என்பதை ஸ்டாலின், ராகுல் தான் முடிவெடுப்பார்கள் என்றார். அவரின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், சூப்பர் அண்ணா என தமது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதன் மூலம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கை காங்கிரஸ் தரப்பில் இருந்து வலுவாக முன் எடுக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது என்கின்றனர் நடப்பதை உற்று கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள்.

Advertisement