அமெரிக்காவில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உதவியாளர் சுட்டுக் கொலை: எதிர்தரப்பு பொறுப்பேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்திற்கு பிஷ்னோய் எதிர் தரப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய், தமது கும்பல் மூலம் இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறான். லாரன்ஸ் பிஷ்னோய் மீதும், அவனது கும்பலில் உள்ளவர்கள் மீதும், அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந் நிலையில், அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் உதவியாளர் விரேந்தர் சாம்ப்வி என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்திற்கு பிஷ்னோய் எதிர் தரப்பான ரோஹித் கோதாரா கும்பல் பொறுப்பேற்று இருக்கிறது. இந்த தாக்குதலை தமது கும்பலைச் சேர்ந்த பல்ஜோத் சிங், ஜஸ்லா என்ற இருவர் அரங்கேற்றியதாக ரோஹித் கோதாரா கும்பல் அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து பல்ஜோத் சிங் எக்ஸ் வலைதள பதிவில், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் விரேந்தர் சாம்ப்வியை பல்ஜோத், ஜஸ்லா ஆகியோர் கொன்றுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் ஒரு துரோகி. அவரை எச்சரிக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள், ஒரு ஆச்சரியம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

விரேந்தர் சாம்ப்வி மரணம் குறித்து, அமெரிக்க போலீசார் எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. முன்னதாக ராஜஸ்தானின் பிகானரில் இருக்கும் போது ரோஹித் கோதாரா, லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவன். பின்னர், தனியாக பிரிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான்.

Advertisement